பசவராஜ் பொம்மை, ரூபா கலா சசிதருக்கு ஆட்டோ டிரைவர்கள் பாராட்டு
கோலார் தங்கவயலில் தொழில் பூங்கா அமைக்க காரணமான முதல்-மந்திரி மற்றும் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ.விற்கு ஆட்டோ டிரைவர்கள் பாராட்டியுள்ளனர்.;
கோலார் தங்கவயல்:
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் உள்ள தங்கச்சுரங்கம் மற்றும் பி.இ.எம்.எல். பகுதிகளில் உள்ள காலி இடங்களை கர்நாடக அரசுக்கு ஒப்படைத்து 2,983 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் பூங்கா அமைக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் கோரிக்கை விடுத்தார். மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். கோலார் தங்கவயலில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், தங்கச்சுரங்க குடியிருப்புகளை அங்கு வசிக்கும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை சட்டசபையில் ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. வலியுறுத்தி பேசினார்.
அதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளிக்கையில் தங்கவயலில் விரைவில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு கோலார் தங்கவயலில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அவர்கள் கோலார் தங்கவயல் மற்றும் தாலுகா முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி, துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.