விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
மண்டியா:
விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை டவுனில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்க நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வந்தார். அவர் கே.ஆர்.பேட்டை டவுன் புரசபை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், பஞ்சாயத்து மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் கே.ஆர்.பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.
நீர்ப்பாசன திட்டங்கள், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் நிரப்பும் திட்டம், சாலைகள் சீரமைக்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதற்காக மொத்தம் ரூ.467 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விழாவில் பேசியதாவது-
உணவுக்கு பஞ்சம் ஏற்படும்
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வினியோகிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அவரது கனவை நனவாக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கர்நாடகத்திலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்டியாவில் 3 தாலுகாவிற்கு உட்பட்ட வீடுகளில் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். மண்டியா மாவட்டத்தின் நீர் ஆதாரமாக காவிரி, ஹேமாவதி ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளில் இருந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை மண்டியா மாவட்ட மக்கள் பெற்று வருகிறார்கள்.
விவசாயிகளின் சிரமத்திற்கு நாம் தலை வணங்கி அவர்களை கவுரவிக்க வேண்டும். விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். மைசுகர் சர்க்கரை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். மேலும் விவசாயிகளிடம் இருந்து கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி ஊக்கத்தொகை
பின்னர் மண்டியா மாவட்டத்தில் பி.யூ. மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார். விழாவில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், நாராயணகவுடா, கோபாலய்யா, ஆர்.அசோக், கோட்டா சீனிவாசபூஜாரி, மாவட்ட கலெக்டர் அஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.