ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு அரசு அதிகாரி பணி

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு அரசு துறையில் அதிகாரி பணி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.;

Update: 2022-12-06 21:28 GMT

பெங்களூரு:

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கர்நாடக வீரர்களுக்கு அரசு துறையில் அதிகாரி பணி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

அதிகாரி பணி

கர்நாடக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் ஆசிய வியைாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ஏகலவ்யா விருது வழங்கும் விழா பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு, விளையாட்டு வீரர்களுக்கு ஏகலவ்யா விருது வழங்கினார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் கர்நாடக விளையாட்டு வீரர்களுக்கு அவர்கள் பட்டப்படிப்பு படித்திருந்தால் அரசு துறைகளில் ஏ பிரிவில் அதிகாரி பணி ஒதுக்கப்படும். ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பி பிரிவு பணியும், பிற விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெறும் வீரர்களுக்கு சி, டி பிரிவு பணியும் வழங்கப்படும்.

நல்ல பயிற்சியாளர்கள்

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் கொள்கை கர்நாடகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. கர்நாடகத்தில் 75 வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை அடுத்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வைக்க தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு நல்ல பயிற்சியாளர்கள் மூலம் உரிய பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களின் படிப்பை தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பதக்கம் வெல்ல வீரர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு தேசியவாதத்தின் குறியீடு. இளம் விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்து.

அதிகளவில் விழிப்புணர்வு

விளையாட்டு திறனை வைத்து நாடுகள் அடையாளம் காணப்படுகின்றன. அதனால் பிரதமர் மோடி விளையாட்டை முன்னிலைக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கேலோ இந்தியா, பிட் இந்தியா, ஜெடோ இந்தியா பெயர்களில் விளையாட்டு குறித்து இளைஞர்கள் இடையே அதிகளவில் விழிப்புணர்பு ஏற்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற திட்டங்களால் கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றது. பாரா ஒலிம்பிக்கில் இந்தியா நல்ல திறனை வௌிப்படுத்தியது. இளைஞர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்த இளைஞர் கொள்கை கொண்டு வரப்படும். போலீஸ் துறையில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்