தடையில்லாத சுங்க வசூல் முறை விரைவில் அறிமுகம் - மத்திய மந்திரி தகவல்
தடையில்லாத சுங்க வசூல் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், வாகனங்கள் பயணித்த தூர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ராஜாங்க மந்திரி வி.கே.சிங் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் 'பாஸ்ட்டேக்' அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகனங்கள் காத்திருக்கும் நேரம் சராசரியாக 47 வினாடிகளாக குறைந்துள்ளது. அதை 30 வினாடிகளுக்கு கீழே குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தடையில்லாத சுங்க வசூல்
அதன் அடிப்படையில், தடையில்லாத சுங்க வசூல் முறையை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் அரை நிமிடம்கூட காத்திருக்க தேவையிருக்காத நிலை ஏற்படும்.
தடையில்லாத சுங்க வசூல் முறை தற்போது டெல்லி-மீரட் விரைவுச்சாலையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
பயணித்த தூரத்துக்கு மட்டும்
இந்த முறை, செயற்கைகோள் மற்றும் கேமரா அடிப்படையில் செயல்படும்.
உங்களின் வாகனம், ஒரு நெடுஞ்சாலையில் நுழைந்ததுமே அதன் பதிவெண், அங்குள்ள கேமராவால் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, தகவல் தொகுக்கப்படும். உங்கள் வாகனம் எத்தனை கி.மீ. பயணித்துள்ளதோ, அந்த தூரத்துக்கு மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த புதிய முறையால், சுங்க கட்டண வசூல் திறன் அதிகரிக்கும், வாகனங்களின் பயண நேரம் குறையும்.
நாடு முழுவதும்
தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் வெற்றி அடைந்தால், விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தற்போதைய அரசு ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம் காரணமாகவே இதுபோன்ற நவீன முறைகளை செயல்படுத்த முடிகிறது. தொலைத்தொடர்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, சுங்கச்சாவடிகளில் தரவுகளை பராமரிக்க இயலுகிறது என்று அவர் கூறினார்.