கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி பெருகி வரும் பேனர், கட்-அவுட் கலாசாரம்
இன்றைய காலக்கட்டத்தில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தி யிலும் பேனர், கட்-அவுட் கலாசாரம் குறையவில்லை.
கட்-அவுட், பேனர் கலாசாரம்
நடிகர்களின் பிறந்தநாள், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள், வருகையை முன்னிட்டு ஆங்காங்கே பேனர்கள், கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டு வருகிறது. சில சமயங்களில் பேனர்கள், கட்-அவுட்டுகளால் விபத்துக்கள் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்ட அலங்கார வளைவில் ரகுபதி என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ரகுபதி உயிரிழந்தார். சட்டவிரோதமாக வைக்கப்பட்ட அலங்கார வளைவால் தான் ரகுபதி உயிரிழந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுபோல சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டவிரோதமாக வைக்கப்பட்டு இருந்த பேனரால் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற ஐ.டி. நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுபோல பெங்களூருவிலும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டு இருந்த பேனர்களால் சில விபத்துகள் நடந்துள்ளன. சமீபத்தில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் சரத் பச்சேகவுடா எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் 50 அடி உயரத்திற்கு சரத் பச்சேகவுடாவின் உருவப்படத்துடன் வாழ்த்து கட்-அவுட் வைத்து இருந்தனர். அந்த கட்-அவுட் சரிந்து அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த தள்ளுவண்டி கடைகள் மீது விழுந்தது. இதில் கடைகள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக கடைக்காரர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஐகோர்ட்டு உத்தரவு
இதையடுத்து பெங்களூருவில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டு உள்ள பேனர்களை அகற்ற உத்தரவிடக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது பெங்களூருவில் உள்ள சட்டவிரோத பேனர்கள், கட்-அவுட்டுகளை உடனடியாக அகற்ற பெங்களூரு மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து நகரில் உள்ள சட்டவிரோத பேனர்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். அதன்படி பிறந்தநாள், நினைவுநாளை குறிக்கும் வகையில் நகரில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி இருந்தனர். ஆனாலும் அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்கள் அகற்றப்படாமல் இருந்தன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் எழுந்தது. எதிர்க்கட்சியினர் வைத்து இருக்கும் பேனர்களை மட்டும் அகற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் வைத்து உள்ள பேனர்களை அகற்றவில்லை என்று அரசியல்ரீதியாகவும் பிரச்சினை எழுந்தது.
ஒரே வார்டில் 100 பேனர்கள்
இதனால் பா.ஜனதாவினர் தங்களது கட்சியின் தலைவர்களை வாழ்த்தி வைத்து இருக்கும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டது. மேலும் பிறந்தநாள், நினைவு நாளுக்கு பேனர்கள் வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய மாநகராட்சி, அதையும் மீறி வைத்தால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்து இருந்தது. ஆனால் மாநகராட்சியின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிடுவது போல பெங்களூரு நகரில் அனைத்து பகுதிகளிலும் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக மந்திரிகள், எம்.எல்.ஏ.க் களை வாழ்த்தி வைக்கும் பேனர்கள் தான் அதிகளவில் உள்ளது. ஒரு தொகுதியில் மந்திரி, எம்.எல்.ஏ.க்களை வாழ்த்தி ஒரு வார்டுக்கு குறைந்தது 100-க்கும் மேற்பட்ட பேனர்கள் சட்டவிரோதமாக வைக்கப்படுகின்றன. ஆனால் அந்த பேனர்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி பெங்களூருவில் சமீப நாட்களாக பேனர், கட்-அவுட் கலாசாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சாலைகள், சர்க்கிள்கள், வளைவுகளிலும், நடைபாதையை ஒட்டியும் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே பெங்களூரு, கோலார் தங்கவயல் உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. எனவே பேனர்கள் வைப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
கட்டியவர்களை அகற்ற வேண்டும்
ராஜாஜிநகரை சேர்ந்த ஆம்ஆத்மி கட்சி பிரமுகர் தினேஷ்குமார் கூறுகையில், ''தற்போது அரசியல் கட்சி தலைவர்களை வாழ்த்தி பேனர்கள், கட்-அவுட்டுகள் வைப்பது வாடிக்கையாகி விட்டது. பேனர் கலாசாரத்தை நிறுத்த முடியாது. ஒரு சட்டமன்ற தொகுதியில் எப்படியும் 8-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. ஒரு வார்டில் குறைந்தது 50 முதல் 100 பேனர்கள் வைக்கின்றனர். இது தேவையற்றது. ஒரு வார்டில் 2 அல்லது 3 பேனர்களை மாநகராட்சி அனுமதி பெற்று வைத்து கொள்ளலாம். அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் விழாவுக்காக தொண்டர்கள் பேனர்கள் வைக்கிறார்கள் என்றால், பிறந்தநாள் விழா முடிந்ததும் பேனர்களை வைத்தவர்களே அதை அகற்ற வேண்டும். அதைவிட்டுவிட்டு மாநகராட்சி அதிகாரிகள் வந்து அகற்றுவார்கள் என்று விட்டு செல்ல கூடாது'' என்றார்.
மக்கள் பணி செய்தால் போதும்
பெங்களூரு சி.வி.ராமன்நகரில் வசித்து வரும் காங்கிரஸ் கட்சியின் பெண் பிரமுகர் சாந்தா சின்னராஜ், ''ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி பெங்களூரு நகர் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்களை வாழ்த்தி பேனர்கள் வைத்து உள்ளனர். பேனர், கட்-அவுட்டுகள் வைத்து தான் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தங்களது முகத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று இல்லை. மக்கள் பணி செய்தாலே போதும். சில இடங்களில் ஆபத்தான முறையில் பேனர்கள் வைத்து உள்ளனர். அந்த பேனர்களால் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சட்டவிரோத பேனர்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்'' என்றார்.
நகரின் அழகு
ஆனேக்கல்லில் வசித்து வரும் சமூக ஆர்வலர் மஞ்சுநாத், ''அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சுயவிளம்பரத்திற்காக பெங்களூரு நகர் முழுவதும் பேனர்கள் வைத்து உள்ளனர். இந்த பேனர்கள் நகரின் அழகை சீர்குலைத்து வருகின்றன. சில இடங்களில் வழிகாட்டி பலகையை மறைத்து பேனர்கள் வைத்து உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். ஐகோர்ட்டு உத்தரவிட்ட போது சட்டவிரோத பேனர்களை அகற்ற அதிகாரிகள் தீவிரம் காட்டினர். தற்போது பேனர்களை அகற்றும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்வது இல்லை. பேனர்களை அகற்றும் விஷயத்தில் எந்த அழுத்தமும் இல்லாமல் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். சட்டவிரோத பேனர்கள் தமிழ்நாட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அதுபோன்ற சூழ்நிலை இங்கும் வராதபடி பார்த்து கொள்ள வேண்டும்'' என்றார்.
சட்டத்தை மதிக்கவில்லை
பெங்களூரு கூட்லுவில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரியான பீட்டர், ''பெங்களூரு நகர் முழுவதும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைத்து உள்ளனர். சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருக்கும் பேனர்களால் விபத்து ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒச ரோடு பகுதியில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனரால் ஒரு வாலிபர் விபத்தில் சிக்கி இருந்தார். அரசியல் கட்சி தலைவர்களை வாழ்த்தி பேனர்கள் வைப்பவர்கள் பொதுமக்களை பற்றி முதலில் நினைத்து பார்க்க வேண்டும்''. கோர்ட்டு உத்தரவை மீறி பேனர்கள் வைத்து இருப்பதாக சொல்கிறார்கள். இப்போது யாரும் சட்டத்தை மதிப்பாக தெரிவது இல்லை'' என்றார்.
பொதுமக்களுக்கு இடையூறு
கோலார் தங்கயல் ஆண்டர்சன்பேட்டை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஏ.ஸ்டீபன் கூறுகையில், "பொது இடங்களில் பேனர், கட்-அவுட் வைப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகின்றன. சில சமயங்களில் பேனர் மற்றும் கட்-அவுட்டுகள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே தான் ஐகோர்ட்டு பேனர்களை வைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசியில்வாதிகள் தங்களின் பிறந்த நாள், வரேவேற்பு நிகழ்ச்சி என்ற பெயரில் கட் அவுட்டுகளை வைத்து பொதுமக்ககளுக்கு இடையூறு ஏற்படுத்துவது கண்டனத்திற்குறியது" என்றார்.
கோலார் தங்கவயல் மாரிக்குப்பத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பி.இ.எம்.எல். அதிகாரி ஜெயராமன் கூறுகையில், மக்கள் நல் ஒழுக்கத்துடனும் நீதி தவறாமல் நடக்கவேண்டும் என்பதற்காக டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியில் அமைப்பு சட்டத்தை ஏற்படுத்தினார். அதன்படி சட்டசபையும், நாடாளுமன்றமும், நீதித்துறையும் செயல்பட்டு வருகின்றன. சில சமயங்கிளில் சட்டத்தை மதிக்கவேண்டிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் சட்டத்திற்கு எதிராக செயல்படும் போது, அதை கோர்ட்டு கண்டிக்கிறது. அதன்படி, பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர், கட்அவுட் வைத்தால் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க கோர்ட்டு பேனர், கட்அவுட் வைக்கக்கூடாது என்று உத்தரவிடுகிறது. அதையும் மீறி அரசியல்வாதிகள் பேனர், கட்-அவுட்டுகளை வைத்தால் அம்பேத்கரை இழிவுப்படுத்துவதாக அர்த்தம்" என்றார்.
கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கலாம்
கோலாரை சேர்ந்தவரும், ஜனாதிபதி விருது பெற்ற முன்னாள் ராணுவ டாக்டருமான காணிக்கராஜ் கூறுகையில், "விளம்பர பேனர்கள் வைக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும். அதில் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் விளம்பதரத்திற்கு மட்டுமே அவகாசம் அளிக்கவேண்டும். கோர்ட்டு பேனர் வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தாலும் சில கட்டுப்பாடுகளை விதித்து மத்திய, மாநில அரசுகள் சட்டத்திருத்தம் செய்து பேனர், கட்-அவுட்டுகளை வைக்க அனுமதி வழங்கலாம்" என்றார்.