ரூ.88 லட்சம் பழைய 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்; ஆந்திராவை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில் ரூ.88 லட்சம் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆந்திராவை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கதிரேனஹள்ளி மேம்பாலம் அருகே சந்தேகப்படும் படியாக காருடன் நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தார்கள். அவர்கள் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த காரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் தடை செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு 3 பேரும் காரில் காத்து இருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவர்கள் ஆந்திராவை சேர்ந்த ராஜண்ண (வயது 60), ஹரிபிரசாத் (53), பெங்களூரு பத்மநாபநகரை சேர்ந்த யோகேஷ் (39) என்று தெரிந்தது.
நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு பழைய 500 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அதனை பயன்படுத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து ரூ.88 லட்சத்திற்கு தடை செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை பெங்களூருவுக்கு எடுத்து வந்து, அவற்றை மாற்றுவதற்கு முயற்சி செய்தது தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து ரூ.88 லட்சத்திற்கு தடை செய்யப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 3 பேர் மீதும் பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.