ரூ.6 கோடி கையாடல் வழக்கு: வங்கி மேலாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

ரூ.6 கோடி கையாடல் செய்த வழக்கில் வங்கி மேலாளரின் ஜாமீன் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2023-03-12 18:45 GMT

பெங்களூரு:

ரூ.6 கோடி கையாடல்

பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் பொதுத்துறை வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக இருப்பவர் ஹரிசங்கர். இவர் தனது வங்கியில் உள்ள சேமிப்பு கணக்குகளில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து ரூ.6 கோடி வரை கையாடல் செய்ததாக புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனது வங்கியில் போலியாக பல்வேறு சேமிப்பு கணக்குகளை தொடங்கி உள்ளார்.

பின்னர், அந்த கணக்குகளில் பிற வாடிக்கையாளர்களின் வைப்புநிதியான ரூ.6 கோடியை பரிமாற்றம் செய்துள்ளார். பின்னர், அந்த பணத்தை எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரிசங்கரை கைது செய்த போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஹரிசங்கர், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நடராஜன் அமர்வு முன்பு நடைபெற்றது.

ஜாமீன் மறுப்பு

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மோசடி தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால், ஹரிசங்கருக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை அழித்து விட வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரூ.6 கோடி ைகயாடல் செய்த வழக்கில் வங்கி மேலாளருக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துவிட்டு, அதை திரும்பபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்