தலைமுடி கொட்டியதால் பெங்களூரு கல்லூரி மாணவி தற்கொலை
தலைமுடி கொட்டியதால் பெங்களூரு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.;
மைசூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா கந்தேகவுடன பாளையா பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் காவ்யா ஸ்ரீ (வயது 22). இவர், மைசூருவில் ராகவேந்திரா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் தங்கும் விடுதி ஒன்றில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் காவ்யாஸ்ரீக்கு தலை முடி கொட்டும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை எடுத்துள்ளார். ஆனாலும் முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காவ்யாஸ்ரீ மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் காவியாஸ்ரீ, தங்கும் விடுதியில் தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த நஜர்பாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு காவ்யாஸ்ரீ எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாகவும், எனது சாவுக்கு வேறு யாரும் காரணவில்லை என்று எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.