பலமுறை பலாத்காரம்: பாலியல் ஆசை கொண்டவராக மாறிய சிறுமி - குற்றவாளியின் ஜாமீன் மனு தள்ளுபடி
பல முறை கற்பழிக்கப்பட்டதால் பாலியல் ஆசை கொண்டவராக மாறிய சிறுமி வழக்கில், கைதான குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
மும்பை,
மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை துபாயில் வேலை செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து சிறுமியின் தாய், அவரது அறையில் தேடிப்பார்த்த போது டைரி ஒன்று கிடைத்தது. அந்த டைரியை புரட்டி பார்த்தபோது, சிறுமி எழுதி வைத்திருந்த குறிப்புகளை படித்து பார்த்து தாய் அதிர்ச்சி அடைந்தார். திருமணமான நபர் ஒருவரால் சிறுமி பலமுறை கொடூரமாக கற்பழிக்கப்பட்டதும், அவருடன் சிறுமி மாயமானதும் தெரியவந்தது.
இது பற்றி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 27 பக்க டைரியை ஆய்வு செய்தனர்.
அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி 4-ம் வகுப்பு படிக்கும் போதே சம்பந்தப்பட்ட நபர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அது குற்றவாளியின் மனைவிக்கும் தெரியும் என்றும் டைரியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் ரீதியாக தூண்டும் மாத்திரையை தனக்கு கொடுத்ததாகவும் சிறுமியின் டைரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளான சம்பந்தப்பட்ட நபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது மனைவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
விசாரணை நிறைவில் அவரது மனைவிக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆனால் அவரது கணவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் நீதிபதி தனது உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமி எழுதிய 27 பக்க டைரியை மேற்கோள் காட்டி, ''அவளுடைய மன, உளவியல் மற்றும் உடல்நிலை மற்றும் அனுபவித்த சோதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என கூறியது. இதுபோன்ற கொடூர குற்றத்தின் காரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி அதிக பாலியல் ஆசை கொண்டவராக மாறிவிட்டார்'' என்று கருத்து தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் மனம், உடல் மற்றும் காயங்களை மேலும் மோசமாக்குவதற்கும், சீர்குலைப்பதற்கும் சமம் என்று நீதிபதி தெரிவித்தார்.