பாகிஸ்தான் நாட்டு பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன்

கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கி கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-11-10 22:15 GMT

பெங்களூரு:

உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் பகுதியில் கதீஜா மெஹ்ரீன்(வயது 33) என்ற பெண் வசித்து வந்தார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அப்பகுதியில் வசித்து வந்தார். அவரது கணவர் ஜாவித் மொகிதீன். இவர்களுக்கு 7, 5 மற்றும் 2½ வயதில் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே கடந்த 2021-ம் போலீசார் நடத்திய சோதனையில் கதீஜா, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர் சட்டவிரோதமாக பட்கல்லில் தங்கி இருந்து போலி ஆவணங்கள் கொடுத்து அதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பெற்றிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கதீஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருடன் சேர்த்து அவரது 2½ வயது குழந்தையும் இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் அவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த நிலையில் கதீஜா ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கதீஜாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதாவது அவரை வழக்கின் தீர்ப்பு வரும் வரை பெங்களூருவில் உள்ள தடுப்பு காவல் சிறையில் அடைக்கவும், அங்கு அனைத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் உத்தரவிட்டது. மேலும் தீர்ப்பு வெளியாகி அவர் விடுதலை செய்யப்பட்டால் அவரது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் கோர்ட்டு கூறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்