கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி- பெண்ணுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை
கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி செய்த பெண்ணுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
பெங்களூரு:-
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் புழக்கம் அதிகரித்தது. இதுதொடர்பான புகார்களின் பேரில் பெலகாவி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அதுதொடர்பாக வனிதா என்கிற தங்கம் என்ற பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து வங்கதேசத்தில் இருந்து கர்நாடகத்திற்குள் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுக்களை கடத்தி வந்தது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வனிதா என்ற தங்கம் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுக்களை கடத்தி வந்து புழக்கத்தில் விட முயன்றது நிரூபணமாகி உள்ளதால் வனிதா என்ற தங்கத்திற்கு 13 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.