வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி

பெங்களூரு அல்சூர்கேடில் விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-08-27 18:45 GMT

பெங்களூரு  :-

விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கோவில் ஒன்றில் விநாயகர் சிலை அமைப்பதற்கு முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதம் கத்தி குத்தில் முடிந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தர்மசாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவில் அருகே விநாயகர் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சுமன் மற்றும் அஜித் ஆகியோர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது சுமன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித்தை சரமாரியாக குதித்தார்.

இதில் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அஜித்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அல்சூர்கேட் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விநாயகர் சிலை நிறுவுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக தெரியவந்தது. இதுகுறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்