ரூ.2.13 கோடி பணத்துடன் ஏ.டி.எம். வாகனத்தை கடத்த முயற்சி - 6 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் ஏற்கனவே பண மேலாண்மை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.

Update: 2024-01-13 11:15 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரில் உள்ள பண மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த 5 ஊழியர்கள், அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தை நிரப்புவதற்காக ரூ.2.13 கோடி பணத்துடன் கூடிய வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது வழியில் டீ குடிப்பதற்காக வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கிடையில், மர்ம நபர் ஒருவர் போலி சாவியை பயன்படுத்தி, அந்த ஏ.டி.எம். வாகனத்தை கடத்திச் சென்றுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்களில் ஒருவரான தீபக் சதாரா, அந்த வழியாக பைக்கில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு கடத்தப்பட்ட வாகனத்தை துரத்திச் சென்றுள்ளார்.

அதே சமயம் ஏ.டி.எம். வாகனத்தை கடத்திச் சென்ற நபர், தர்ஷித் தக்கார் என்பவரது காரின் மீது மோதிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் தர்ஷித் தக்காரும் அந்த வாகனத்தை துரத்திச் சென்றார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.

இந்நிலையில் பல்வேறு வாகனங்கள் தன்னை துரத்தி வருவதை உணர்ந்த கடத்தல்காரர், வாகனத்தை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு வேறு ஒரு காரில் தப்பிச் சென்றுள்ளார். இதன் பின்னர் போலீசார் கடத்தப்பட்ட வாகனத்தையும், அதில் இருந்த ரூ.2.13 கோடி பணத்தையும் மீட்டனர்.

தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், இந்த கடத்தலில் தொடர்புடைய 6 நபர்களை கைது செய்தனர். அதில் 2 பேர் ஏற்கனவே பண மேலாண்மை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில் அவர்கள் தீட்டிய திட்டத்தின் அடிப்படையில் மேலும் 4 பேரை சேர்த்துக் கொண்டு இந்த கடத்தல் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் 6 பேர் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்