கடந்த 8 ஆண்டுகளில் காந்தியின் கனவை நனவாக்க முயற்சி - பிரதமர் மோடி தகவல்

மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் ஆகியோர் கனவு கண்ட இந்தியாைவ உருவாக்க கடந்த 8 ஆண்டுகளில் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2022-05-29 04:10 GMT

ராஜ்கோட்,

குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம் அர்கோட் நகரில் 200 படுக்கை வசதிகளை கொண்ட பன்னோக்கு ஆஸ்பத்திரி கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

மத்தியில் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு மேற்கொண்ட திட்டங்களை இந்த நிகழ்ச்சியில் பட்டியலிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தேசத்துக்கான சேவையில் கடந்த எட்டு ஆண்டுகளில் நான் எந்த முயற்சியையும் விட்டுவிடவில்லை. உங்களையோ அல்லது இந்தியாவின் வேறெந்த குடிமகனையோ வெட்கித் தலைகுனிய வைக்கும் எந்த ஒரு செயலையும் நான் அனுமதிக்கவில்லை.

ஏழைகள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் ஆதிகாரம் பெற்ற ஒரு இந்தியாவை மகாத்மா காந்தி விரும்பினார். அத்துடன் தூய்மை மற்றும் சுகாதாரத்தை வாழ்வின் பாகமாக கொண்டிருக்க வேண்டும் என்பதையும், தற்சார்பு தீர்வுகளை கொண்ட பொருளாதாரத்தையும் அவர் விரும்பினார்.

மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலின் கனவான இந்த இந்தியாவை உருவாக்க கடந்த 8 ஆண்டுகளில் நேர்மையான முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

கடந்த 8 ஆண்டுகளில் 3 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு காங்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன. கழிவறைகள் கட்டிக்கொடுத்ததன் மூலம் 10 கோடி குடும்பங்கள் திறந்தவெளி கழிப்பறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.

கியாஸ் இணைப்பு வழங்கியதன் மூலம் 9 கோடி பெண்கள் புகை அடுப்பில் இருந்து மீண்டுள்ளனர். 2.5 கோடி குடும்பங்களுக்கு மின் இணைப்பு, 6 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 50 கோடிக்கும் அதிகமானோர் இலவச சிகிச்சை திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர்.

இவை அனைத்தும் வெறும் எண்கள் அல்ல. மாறாக நாட்டின் ஏழைகளுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கான நமது உறுதிப்பாட்டிற்கு இது ஒரு சான்று. ஏழைகள் வாழ்வை மேம்படுத்த கடந்த 8 ஆண்டுகளில் எனது அரசு கடுமையாக உழைத்து இருக்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (இப்கோ) சார்பில் குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கலோலில் உலகின் முதல் நானோ யூரியா (திரவம்) ஆலை நிறுவப்பட்டு உள்ளது.

இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடந்த கூட்டுறவுத்துறை கருத்தரங்கில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மூட்டை யூரியா உரம் நானோ யூரியாவாக (திரவம்) ஒரு ½ லிட்டர் பாட்டிலில் அடைப்பதை கற்பனை செய்து பாருங்கள். இதன் மூலம் போக்குவரத்து செலவு எவ்வளவு குறைந்து, விவசாயிகளுக்கு பலனளிக்கப்போகிறது. இது நமது விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்.

கலோலில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையால் தினசரி 1½ லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்ய முடியும். அதேநேரம் இதுபோன்ற 8 ஆலைகள் நாடு முழுவதும் வரும் ஆண்டுகளில் நிறுவப்பட உள்ளன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

 


Tags:    

மேலும் செய்திகள்