பள்ளி மாணவர்களை காரில் கடத்த முயற்சி: குழந்தை கடத்தல் கும்பல் கைவரிசையா?

துமகூருவில் பள்ளி மாணவர்களை காரில் கடத்த முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-29 22:27 GMT

துமகூரு: துமகூருவில் பள்ளி மாணவர்களை காரில் கடத்த முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

கடத்தல் கும்பல்

கர்நாடகத்தில் குழந்தை திருடர்கள் தொல்லை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பல்லாரி, பெலகாவி மாவட்டங்களில் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லாரியில் குழந்தை திருடன் என நினைத்து கூலி தொழிலாளியை கிராமத்தை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

இதனால் கர்நாடகம் முழுவதும் குழந்தை திருட்டு கும்பலால் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் துமகூருவில் பள்ளி மாணவர்கள் 3 பேரை காரில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா பெல்லாரா கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஷ்மிகா, லோகித், ஹர்ஷிதா. இவர்கள் 3 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.

காரில் கடத்தல்

பின்னர் அவர்கள் வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்களை வழிமறித்தது. பின்னர், காரில் இருந்து இறங்கிய மர்மகும்பல், 3 பேரையும் கடத்தி காரில் ஏற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து காரை நிறுத்திய மர்மகும்பல் அவர்கள் 3 பேரையும் அங்கேயே இறக்கிவிட்டு உடனடியாக தப்பி சென்றது.

அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டனர். பின்னர், இதுகுறித்து குளியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுவன் உள்பட 3 பேரையும் கடத்த முயன்ற கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களா?, அல்லது அதே கிராமத்தை சேர்ந்தவர்களா?, குழந்தை கடத்தல் கும்பலா? எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கிராமமே பீதியில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்