காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல்; கேரள முதல்-மந்திரியின் பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு
பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் 2 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரள மாநில அரசின் 'நவ கேரளா சதஸ் யாத்ரா' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.டி.தாமஸ் மற்றும் அஜய் குரியகோஸ் ஆகியோர், முதல்-மந்திரியின் பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், முதல்-மந்திரி பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் 2 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 323 மற்றும் 325 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆழப்புலா தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.