வாலிபர் மீது பா.ஜனதா உறுப்பினர்கள் தாக்குதல்
பேனர் அகற்றிய விவகாரம் தொடர்பாக வாலிபர் மீது பா.ஜனதா உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ராஜாஜிநகர்:
பெங்களூரு ராஜாஜிநகர் 3-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் ராமமந்திர் விளையாட்டு மைதானம் அருகே உள்ள நடைபாதையில் நடந்து சென்றார். அப்போது நடைபாதையில் பேனர்கள், போஸ்டர்கள் கிடந்தன. உடனே அவர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் உடனடியாக அந்த பேனர்களை அகற்றவும் கோரினார். ஆனால் நீண்டநேரமாகியும் அதிகாரிகள் யாரும் வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து சந்தோஷ், அந்த பேனர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அந்த சமயத்தில் அங்கு வந்த கும்பல், பேனர் அகற்றியது குறித்து அவரிடம் கேட்டு தகராறு செய்தது.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கும்பல், சந்தோஷ் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பெற்ற பின்னர், சந்தோஷ், இதுகுறித்து மாகடி ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேனர் அகற்றிய விவகாரத்தில் அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா உறுப்பினர்கள் சிலர் சந்தோசை தாக்கியது தெரிந்தது. இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.