திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி செல்ல முயற்சி; 'சைரன்' ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பியது

சிவமொக்காவை தொடர்ந்து மங்களூருவில் திருடிய பொக்லைன் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மநபர்கள் தூக்கி செல்ல முயன்றனர். சைரன் ஒலித்ததால் ரூ.3½ லட்சம் தப்பி இருந்தது.

Update: 2023-08-05 18:45 GMT

மங்களூரு:

சிவமொக்கா டவுன் வினோபாநகர் சக்தி கோவில் பகுதியில் ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 26-ந்தேதி மர்மநபர்கள் சிலர் பொக்லைன் எந்திரத்தை திருடி, ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு வந்து, ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து தூக்கி செல்ல முயன்றனர். அந்த சமயத்தில் அங்கு ரோந்து போலீசார் வந்ததால், மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனால் ரூ.7½ லட்சம் தப்பியிருந்தது. இந்த வழக்கில் இன்னும் மர்மநபர்களை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது அதேபோல் மீண்டும் ஒரு துணிகர சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் சூரத்கல்லில் உள்ள வணிக வளாகத்தில் சவுத் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் அருகே அதன் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு காவலாளிகள் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏ.டி.எம். மையத்துக்கு மர்மநபர்கள் வந்துள்ளனர்.

பின்னர் அவர்கள், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து தூக்கி செல்ல முயன்றுள்ளனர்.

அந்த சமயத்தில் திடீரென்று ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை மணி (சைரன்) ஒலித்தது. இந்த சத்தத்தை கேட்டு அந்தப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு பொக்லைன் எந்திரத்தை அந்தப்பகுதியிலேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் பெயர்ந்து கிடந்தது. இதனால், மர்மநபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றதும், சைரன் ஒலித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பி சென்றதும் ெதரியவந்தது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்ததும் நேற்று காலை துணை போலீஸ் கமிஷனர் தினேஷ்குமார், உல்லால் போலீசார், வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை சரி பார்த்தனர். அப்போது பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்தது. சைரன் ஒலித்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.3½ லட்சம் தப்பியது. மேலும் மர்மநபர்கள் பொக்லைன் எந்திரத்தை திருடி வந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற முயன்றது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்துகொண்டனர்.

இதையடுத்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலையில் மர்மநபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் போலீசார், அந்த பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்