ராபர்ட்சன்பேட்டை அம்மன் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பகுதியில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் இரு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
கோலார் தங்கவயல்:
இருகோஷ்டியினர் இடையே மோதல்
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட 2-வது பிளாக் பகுதியில் உள்ள அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது சாம்ராஜ்பேட்டை மற்றும் 2-வது பிளாக் பகுதியை சேர்ந்த இரு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பானது.
கத்திக்குத்து
இந்த மோதலில் 2-வது பிளாக் பகுதியை சேர்ந்த பிரவீன் மற்றும் ஹரீஷ் ஆகிய இருவரும் கத்திக்குத்து காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு கோலார் தங்கவயல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கோலார் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அறிந்த ராபர்ட்சன்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோலார் தங்கவயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.