சிக்கமகளூருவில், அரசு ஆஸ்பத்திரிக்கு மதுபோதையில் வந்த டாக்டர் பணியிடை நீக்கம்

சிக்கமகளூருவில், அரசு ஆஸ்பத்திரிக்கு மதுபோதையில் பணிக்கு வந்த டாக்டரை மந்திரி தினேஷ் குண்டுராவ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.;

Update: 2023-06-02 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில், அரசு ஆஸ்பத்திரிக்கு மதுபோதையில் பணிக்கு வந்த டாக்டரை மந்திரி தினேஷ் குண்டுராவ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அரசு ஆஸ்பத்திரி

சிக்கமகளூரு மாவட்டம் கலசாவில் அரசு ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பொதுநல டாக்டராக பாலகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த ஆஸ்பத்திரிக்கு பெண்கள் சிலர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆனாலும் டாக்டர் பாலகிருஷ்ணன் வரவில்லை. அவருக்கு ஆஸ்பத்திரி ஊழியர்களும் செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த டாக்டர் பாலகிருஷ்ணன் நீண்ட நேரத்திற்கு பிறகு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அந்த பிரிவுக்கு சென்று தயாரானார்.

கருத்தடை அறுவை சிகிச்சை

அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ள வந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் டாக்டர் பாலகிருஷ்ண கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கு இருந்த நோயாளிகள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் டாக்டர் பாலகிருஷ்ணன் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உமேசிற்கு புகார் சென்றது. அவர் டாக்டர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து வேறொரு டாக்டரை வரவழைத்து அங்கிருந்த பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

பணி இடைநீக்கம்

இதற்கிடையே டாக்டர் பாலகிருஷ்ணன் மதுபோதையில் வந்ததும், அவருடன் அங்கிருந்த நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதற்கிடையே இதுபற்றி சுகாதார துறை மந்திரி தினேஷ் குண்டுராவின் கவனத்துக்கு சென்றது.

அதன்பேரில் மதுபோதையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வந்த டாக்டர் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்