எனது அரசை கவிழ்க்க சமூகவிரோதிகளுடன் கூட்டு சேர்ந்து சதிசெய்த அஸ்வத் நாராயண்-குமாரசாமி குற்றச்சாட்டு
எனது கூட்டணி அரசை கவிழ்க்க மந்திரி அஸ்வத் நாராயண் சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து சதிசெய்ததாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு: எனது கூட்டணி அரசை கவிழ்க்க மந்திரி அஸ்வத் நாராயண் சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து சதிசெய்ததாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
ஆதாரங்கள் உள்ளன
என்னை உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் விமர்சித்துள்ளார். அவர் போலி கல்வி சான்றிதழின் ராஜா. ராமநகருக்கு வந்து குமாரசாமி எங்கே என்று கேள்வி கேட்டுள்ளார். நான் ராமநகருக்கு வருவது இல்லை என்று குறை கூறியுள்ளார். அவருக்கு கண் பார்வை குறைபாடு இருக்கும் என்று கருதுகிறேன். கடலோர மாவட்டத்தில் நடைபெற்ற கொலைகள், வெள்ள பாதிப்புகள் குறித்து சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
அஸ்வத் நாராயணுக்கு வயிற்றெரிச்சல். உயர்கல்வித்துறை ஊழல் குறித்து என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அதை வெளியிட்டால் என்ன ஆகும் என்று யோசித்து பாருங்கள். ஊழலை மூடிமறைக்க ஆவணங்கள் இருந்த மாநகராட்சி அலுவலக அறை தீவைக்கப்பட்டது. ஆபரேஷன் தாமரையில் எம்.எல்.ஏ.க்களை இழுக்க கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பைகளில் அடைத்து எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் வைத்துவிட்டு வருவதா?.
சமூகவிரோதிகளுடன் கூட்டு
எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசை கவிழ்க்க சமூக விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டது எனக்கு தெரியாதா?. தைரியம் இருந்தால் அஸ்வத் நாராயண் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும். அங்கு எல்லாவற்றையும் வெளியிடுகிறேன். ஆபரேஷன் தாமரையை மேற்கொண்டதால் அஸ்வத் நாராயணுக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைத்தது.
ஜனதா தளம் (எஸ்) ஒரு நிறுவனம் என்று அவர் கூறியுள்ளார். அவர் எத்தனை நிறுவனங்களை நடத்துகிறார் என்பதை சொல்ல வேண்டுமா?. தேர்தல் வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, கல்லூரி ஆசிரியர் நியமன முறைகேடு, அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு பேரம் பேசும் அஸ்வத் நாராயண், உயர்கல்வித்துறையை நடத்தும் முறை இதுதானா?.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.