கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் தர்ணா

கர்நாடக மேல்-சபையில் நில விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-02-21 21:32 GMT

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபையில் நில விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நடவடிக்கை எடுப்போம்

கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் மரிதிப்பே கவுடா, அரசு நிலம் முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, பெங்களூரு வடக்கு தாலுகா நாகவரா கிராமத்தில் 32 குண்டா நிலம் உள்ளது. அர்க்காவதி லே-அவுட் அமைக்கும் நோக்கத்திற்காக அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அதில் கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளதால், 12 குண்டா நிலம் அரசாணையில் இருந்து கைவிடப்பட்டது. அவற்றை ஈடுகட்ட 20 குண்டா நிலம் மீண்டும் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. பிறகு அந்த நிலம் மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது' என்றார்.

மந்திரி முருகேஷ் நிரானியின் இந்த பதிலை உறுப்பினர் மரிதிப்பேகவுடா ஏற்க மறுத்துவிட்டார். அவர் பேசுகையில், 'இந்த நில விஷயத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு யோக்கியதை இல்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என்று சொல்ல இந்த அரசுக்கு தைரியம் இல்லை' என்று கோபமாக கூறினார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

இதற்கு ஆட்சபேனை தெரிவித்த மந்திரி முருகேஷ் நிரானி, உறுப்பினர் எல்லை மீறி பேசுவதாகவும், இது சரியல்ல என்றும் கூறினார். அப்போது, மந்திரி முருகேஷ் நிரானிக்கும், மரிதிப்பேகவுடாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் சமாதானப்படுத்த மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி முயற்சி செய்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வேறு ஒரு உறுப்பினரை கேள்வி கேட்குமாறு அவர் அழைத்தார். இதற்கு மரிதிப்பேகவுடா எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர் நாராயணசாமி, மரிதிப்பேகவுடா மந்திரியை ஒருமையில் பேசியுள்ளார் என்றும், அதனால் அவருக்கு பேச அனுமதி அளிக்கக்கூடாது என்றும் கூறினார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹாரிபிரசாத் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. இதனால் சபையில் பரபரப்பு நிலவியது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மேல்-சபை தலைவர் இருக்கையை சூழ்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது பசவராஜ் ஹொரட்டி, இந்த பிரச்சினை குறித்து வேறு ஒரு விதியின் கீழ் விவாதிக்க அனுமதி அளிப்பதாக கூறினார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்று இருக்கைக்கு திரும்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்