சட்டசபை தேர்தல்: அசாம், மணிப்பூர் முதல்-மந்திரி முன்னிலையில் மாணிக் சாஹா வேட்பு மனு தாக்கல்

திரிபுரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல்-மந்திரி மாணிக் சாஹா பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.;

Update: 2023-01-30 08:41 GMT



அகர்தலா,


60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இதன்படி, பா.ஜ.க. 48 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலையும், 6 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிட்டது. அதன் கூட்டணியில் உள்ள ஐ.பி.எப்.டி. கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சி 17 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான நட்சத்திர பிரசாரகர்களின் பட்டியலையும் பா.ஜ.க.வெளியிட்டது.

இதன்படி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த பட்டியலில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா, திரை நட்சத்திரங்களான மிதுன் சக்ரவர்த்தி, மனோஜ் திவாரி, ஹேமமாலினி மற்றும் லாக்கட் சாட்டர்ஜி ஆகியோரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கான பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

சட்டசபை தேர்தலில், திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா பொர்தோவாலி நகர தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக சென்றார்.

இதன்பின்பு, தேர்தல் அலுவலகம் சென்ற அவர், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் ஆகியோர் முன்னிலையில் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்