பெற்றோர் மீது கட்டையால் தாக்குதல்; தாய் பரிதாப சாவு வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளி கைது
நீண்ட நேரம் தூங்கியதால் ஆத்திரத்தில் பெற்றோரை கட்டையால் தொழிலாளி சரமாரியாக தாக்கினார். இதில் தாய் பலியானார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு-
நீண்ட நேரம் தூங்கியதால் ஆத்திரத்தில் பெற்ேறாரை கட்டையால் தொழிலாளி சரமாரியாக தாக்கினார். இதில் தாய் பலியானார். இதையடுத்து வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கூலித்தொழிலாளி
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா முத்தினகொப்பா அருகே உள்ள ஆல்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது 65). இவரது மனைவி பார்வதம்மா (57). இவர்களது மகன் நாகராஜ் (32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நாகராஜ் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் நாகராஜ் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நாகராஜ் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் தனது தாய் மற்றும் தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். பின்னர் காலையில் நாகராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது தாய்- தந்தை தூங்கி கொண்டு இருந்தனர்.
பெற்றோர் மீது தாக்குதல்
நீண்ட நேரம் அவர்கள் தூங்கியதால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து தந்தை சித்தப்பா, தாய் பார்வதம்மா ஆகியோரை சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து அவர்கள், காயமடைந்த சித்தப்பா, பார்வதம்மா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் பார்வதம்மாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தாய் சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பார்வதம்மா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். சித்தப்பா என்.ஆர்.புரா அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பியோடிய நாகராஜை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
தொழிலாளி கைது
இந்தநிலையில் என்.ஆர்.புரா பகுதியில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நீண்டநேரம் தூங்கியதால் தாயை கட்டையால் தொழிலாளி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.