எச்.ஏ.எல்.க்குள் அத்துமீறி நுழைந்த அசாம் வாலிபர் கைது: காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க விமான நிலையத்திற்குள் நுழைந்தது அம்பலம்

எச்.ஏ.எல். விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக கைதான அசாம் வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க அவர் விமான நிலையத்திற்குள் புகுந்தது அம்பலமாகி உள்ளது.

Update: 2022-11-17 23:43 GMT

பெங்களூரு: எச்.ஏ.எல். விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக கைதான அசாம் வாலிபர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க அவர் விமான நிலையத்திற்குள் புகுந்தது அம்பலமாகி உள்ளது.

பாதுகாப்பில் குளறுபடி

பிரதமர் மோடி கடந்த 11-ந் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக பெங்களூரு வந்து இருந்தார். அவர் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்து இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 9-ந் தேதி எச்.ஏ.எல். விமான நிலையத்திற்குள் ஒரு வாலிபர் சுற்றித்திரிந்தார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

இதற்கிடையே பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. கைதான வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் அசாம் மாநிலம் சோனித்பூரை சேர்ந்த முகுந்த் கவுந்த் (வயது 36) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் முகுந்த் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் முகுந்திடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

காதலியின் கணவரிடம் இருந்து...

அதாவது முகுந்த்தும், பூர்வி என்ற பெண்ணும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் காதலை ஏற்க பெற்றோர் மறுத்து விட்டதால் முகுந்த் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பூர்வியும், பிபுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவுக்கு வந்து விட்டார். பூர்வியும், அவரது கணவரும் எச்.ஏ.எல். விமான நிலையத்தையொட்டியுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்த வந்து உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் முகுந்த்தும், பூர்வியும் தங்களது காதலை தொடர்ந்து உள்ளனர்.

பூர்வி கூறியதன்பேரில் அவரை பார்க்க முகுந்த் கடந்த 9-ந் தேதி பெங்களூருவுக்கு வந்து இருந்தார். 2 நாட்கள் விடுதியில் தங்கி இருந்த அவர் கடந்த 11-ந் தேதி பிபுல் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு பூர்வியை பார்க்க முகுந்த் சென்று உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பிபுல் திடீரென வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அப்போது வீட்டில் முகுந்த் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிபுல், முகுந்தை பிடிக்க முயன்று உள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் பிபுலிடம் இருந்து தப்பி ஓடிய முகுந்த் எச்.ஏ.எல். விமான நிலைய சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்