புலி தாக்கியதில் அசாம் பெண் தொழிலாளி படுகாயம்

சிக்கமகளூரு அருகே புலி தாக்கியதில் அசாம் பெண் தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2023-06-06 18:45 GMT

சிக்கமகளூரு:-

காபி தோட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் முல்லையன்கிரி அருகே பண்டரவள்ளி கிராமத்தில் காபி தோட்டம் உள்ளது. இந்த காபி தோட்டத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் சிலர் குடும்பத்துடன் தங்கியிருந்து காபி செடிகளை வளர்த்து, காபி கொட்டைகளை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதுபோல் நேற்று காலை அந்த காபி தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் காபி கொட்டை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

புலி தாக்கியதில் பெண் படுகாயம்

அந்த சமயத்தில் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி அந்த காபி தோட்டத்தில் புகுந்துள்ளது. இதை கவனிக்காமல் பெண் தொழிலாளி ஒருவர் காபி கொட்டைகளை பறிப்பதில் மும்முரமாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த புலி, அந்த பெண் மீது பாய்ந்து தாக்கியது.

இதனால் அவர் வலியில் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளிகள் அங்கு ஓடி சென்றுள்ளனர். இதையடுத்து புலி அங்கிருந்து தப்பி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டது. புலி தாக்கியதில் அந்த பெண் தொழிலாளி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே சக தொழிலாளிகள் அவரை மீட்டு சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

தீவிர சிகிச்சை

அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிக்கமகளூரு புறநகர் போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், புலி தாக்கியதில் காயமடைந்த பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்த சீமா (வயது 30) என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முல்லையன்கிரி பகுதியில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் பலியாகியிருந்தார். இந்த நிலையில் தற்போது புலி தாக்கியதில் அசாம் பெண் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இரும்பு கூண்டுவைத்து புலியை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்