ராகுல் காந்திக்கு அசாம் போலீஸ் சம்மன்
ராகுல் காந்தி கடந்த மாதம் அசாமில் நடைபயணம் மேற்கொண்டபோது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கவுகாத்தி,
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, மணிப்பூரில் தொடங்கி மும்பையை நோக்கி பாத யாத்திரை நடத்தி வருகிறார். கடந்த மாதம் அவர் அசாம் மாநிலத்தில் நடைபயணத்தை நடத்தினார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ராகுல்காந்தி முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தின்போது கூட்டத்தினரை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணைக்காக போலீசார் அசாம் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வருகிற 23-ந்தேதி பகல் 11.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கும் அசாம் போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அவரையும் 23-ந்தேதி அசாம் போலீசார் விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அசாம் காங்கிரசார் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.