அசாம்: அல்கொய்தாவின் கிளை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய மதப்பள்ளி இடித்து தரைமட்டம்
பள்ளியில் பயின்று வந்த 43 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி ஹிம்மந்த் பிஸ்வா தெரிவித்தார்.;
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தின் பார்பேடா, கவுகாத்தி மற்றும் மொரிஹன் ஆகிய மாவட்டங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து மாநில போலீசார் கடந்த மாத இறுதியில், அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வங்காளதேசத்தில் இயங்கி வரும் அன்சருல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முப்தி முஸ்தபா, அம்ருதின் அன்சாரி, மமுன் ரஷித் உள்பட 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அன்சருல் இஸ்லாம் வங்காளதேசத்தில் இயங்கி வரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் கிளை பயங்கரவாத அமைப்பாகும். கைது செய்யப்பட்டவர்களில் முப்தி முஸ்தபா என்ற நபர் பயங்கரவாத அமைப்புடன் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், வெளிநாட்டில் தேடப்பட்டு வந்த குற்றவாளிக்கு முஸ்தபா தான் நடத்தி வந்த மதப்பள்ளியில் தங்க வைத்து அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பவைத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, மொரிஹன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய மதப்பள்ளி இன்று ஜேசிபி வாகனங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
முப்தி முஸ்தபா 2017இல் மத்திய பிரதேசத்தின் போபாலில் இஸ்லாமிய சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்நிலையில், அவர் நடத்தி வந்த பள்ளியில் பயின்று வந்த 43 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி ஹிம்மந்த் பிஸ்வா தெரிவித்தார்.