பெங்களூருவில் அசாம் இளம்பெண் கூட்டு கற்பழிப்பு; காதலன் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
பெங்களூருவில் திருமண ஆசை காட்டி அசாம் இளம்பெண் கூட்டாக கற்பழிக்கப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான காதலன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;
பெங்களூரு:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சாகித் உத்தீன். இவர், பெங்களூருவில் வசித்து வருகிறார். அசாமில் சாகித் வசித்த போது, அந்தப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில், அசாம் சென்றிருந்த சாகித் தனது காதலியை திருமணம் செய்வதாக கூறி பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளார்.
பரப்பனஅக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகமங்களாவில் வாடகை வீட்டில் இளம்பெண்ணுடன் சாகித் தங்கி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாகித்திற்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பது பற்றி இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதுபற்றி கேட்டு சாகித்துடன் இளம்பெண் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாகித், இளம்பெண்ணை பெல்ட்டால் தாக்கியதுடன், அவரை வீட்டின் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டி வைத்திருந்தார். இதற்கிடையில், தனது நண்பர்கள் 3 பேரை சாகித் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சாகித் உள்பட 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டாக கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளுவதற்கும் சாகித் முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி பரப்பனஅக்ரஹாரா போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சாகித், அவரது நண்பர்கள் கூட்டாக கற்பழித்து விட்டதாகவும், சாகித்திற்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதை மறைத்து தன்னை திட்டமிட்டு ஏமாற்றி விட்டதாகவும் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகித், அவரது நண்பர்கள் 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.