அசாமில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் குறித்து அசாம் காவல்துறையினரை அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா பாராட்டியுள்ளார்.;
கச்சார்,
அசாமின் கச்சார் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாடர்பூர் போலீஸ் நிலையத்தின் கீழ் உள்ள ஜலல்பூர் பகுதியில் நேற்று இரவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வாகனத்தின் ஒரு ரகசிய அறையிலிருந்து 1 லட்சம் யாபா என்ற போதைப்பொருள் மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக, கச்சாரின் கட்டிகோரா போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.30 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் கைதான மூவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அசாம் காவல்துறையினரை அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பாராட்டியுள்ளார்.