அசாமில் 'பாரத் ஜோடோ யாத்திரை' ஆலோசனை கூட்டம்; காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

அசாமில் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2022-09-26 20:18 GMT

கவுகாத்தி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்திரை' தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.

இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையானது வருகிற நவம்பர் 1-ந் தேதி அசாம் மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் அசாம் மாநிலம், துப்ரி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் பவனில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசேத் அலி சவுத்ரி கூறுகையில், துப்ரி மாவட்ட காங்கிரசில் எந்த பிளவும் ஏற்படவில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். பாரத் ஜோடோ யாத்திரை தொடர்பாக எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை.

பாரத் ஜோடோ யாத்திரை குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒருதரப்பினர் மாவட்ட தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த பிரச்சினையை எழுப்ப இந்த கூட்டம் சரியான இடம் அல்ல என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில விரும்பதகாத செயல்கள் நடைபெற்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்