தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க கெஜ்ரிவாலுடன் டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியா இன்று குஜராத் பயணம்!
ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா இன்று குஜராத் செல்கிறார்கள்.
புதுடெல்லி,
டெல்லி கெஜ்ரிவால் அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். அங்கு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., மணீஷ் சிசோடியா, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபி கிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மதுபான உரிமம் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள 8 பேருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீசை சி.பி.ஐ. நேற்று வெளியிட்டது. எனினும் மணீஷ் சிசோடியா உள்பட 4 பேருக்கு எதிராக இந்த நோட்டீஸ் வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரம் மத்திய பாஜக அரசுக்கும் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் பெரும் மோதலாக வெடித்தது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் இரண்டு நாள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார்கள்.அங்கு பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சட்டசபை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்கள்.
இது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நானும் மணீஷ் ஜியும் குஜராத் செல்கிறோம். டெல்லியைப் போலவே குஜராத்திலும் நல்ல பள்ளிகள், நல்ல மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகள் கொண்டு வரப்படும். அனைவருக்கும் இலவச நல்ல கல்வியும் நல்ல சிகிச்சையும் கிடைக்கும். நாங்கள் இளைஞர்களுடனும் உரையாட உள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார்.