ராணுவத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க டெல்லி அரசின் சார்பில் இலவச பள்ளிக்கூடம் திறப்பு!
ஆயுதப் படையில் சேர விரும்பும் மாணவர்களுக்கான பள்ளியை டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.
புதுடெல்லி,
ராணுவத்துக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேக பள்ளியை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார்.
டெல்லி நஜப்கரில் உள்ள ஜரோடா கலான் கிராமத்தில் இந்த பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளி, மாணவர்கள் ஆயுதப் படைக்குத் தயாராவதற்கு உதவும். இந்த பள்ளிக்கு மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பள்ளி திறப்புவிழா நிகழ்ச்சியில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவுடன் கலந்துகொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில்:-
ஆயுதப் படையில் சேர விரும்பும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க முறையான இடம் இல்லை. அவர்கள் தாங்களாகவே தயார் செய்து வந்தனர். இப்போது நம்மிடம் இது உள்ளது. ஏழை எளியவர் கூட இங்கு சேர்க்கைக்கு வரலாம்.
பள்ளியில் சேர்க்கைக்காக சுமார் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 180 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பள்ளி முற்றிலும் இலவசம், இது ஒரு குடியிருப்பு பள்ளி. ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி உள்ளது. இதில் சிறந்த வசதிகள் உள்ளன.
மாணவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். இந்த பள்ளியின் மூலம் அவர்கள் ஆயுதப் படையில் சேர தயாராக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், உலகின் தலைசிறந்த கல்வித் துறை மந்திரி மணீஷ் சிசோடியா என்று புகழாரம் சூட்டினார்.