அமலாக்கத்துறை 3-வது முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால் - பாஜக விமர்சனம்

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் என்னை கைது செய்யும் நோக்கத்தோடு இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2024-01-03 07:15 GMT

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2 வது முறை ஆஜராக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலம் புறப்பட்டுச் சென்றார்.

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இன்று ஆஜராக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக இயலவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பி உள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் என்னை கைது செய்யும் நோக்கத்தோடு இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூணவல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

அமலாக்கத்துறையின் 3வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். அங்கே ஏதோ மறைக்கப்படுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இல்லையெனில் குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும். நீதிமன்றங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'ஆம் ஆத்மி கட்சி இன்றைய தேதியில் மிகப்பெரிய ஊழல் கட்சி. அக்கட்சியின் பல அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். அவர்களின் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து அமலாக்கத்துறையின் சம்மனைத் தவிர்த்து வருகிறார், இது ஏதோ தவறு இருப்பதைக் காட்டுகிறது' இவ்வாறு அவர் கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்