ஜேஇஇ நுழைவுத்தேர்வில் மோசடி: 820 மாணவர்களுக்கு உதவிய ரஷிய ஹேக்கர்! சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

கஜகஸ்தானில் இருந்து டெல்லியில் தரையிறங்கிய ரஷிய ஹேக்கர் மிகைல் ஷார்கின் நேற்று கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-04 12:18 GMT

புதுடெல்லி,

ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா கட்டுப்பாட்டால் இணையவழியில் நடைபெற்றது. அப்போது ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அபினிட்டி எஜுகேஷன் என்ற தனியார் நிறுவனமானது பல்வேறு மோசடியாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இணையவழியாக நடைபெற்ற தேர்வில் கேள்வித்தாளைத் தேர்வுக்கூடத்துக்கு வெளியில் இருக்கும் மோசடி கும்பல் நபர்கள் தொடர்புகொண்டுள்ளனர்.

இத்தேர்வில் தேர்வர்களுக்கு பதிலாக, தேர்வெழுதிய நபர்களின் கணினிகளை ரிமோட் ஆக்ஸஸ் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, வெளியிலிருந்து பதிலளிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில், வழக்குடன் தொடர்புடைய ரஷிய நபரை சிபிஐ நேற்று கைது செய்தது.

இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஜகஸ்தானில் இருந்து டெல்லியில் தரையிறங்கிய ரஷிய ஹேக்கர் மிகைல் ஷார்கின் நேற்று கைது செய்யப்பட்டார். ரஷிய ஹேக்கர் மிகைல் ஷார்கின் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மோசடி செய்த 820 மாணவர்களுக்கு உதவி புரிந்து தேர்வெழுத உதவிய ரஷிய ஹேக்கர் மிகைல் ஷார்கின் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என்று அதிகாரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர்.இதையடுத்து அவரை 2 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அவர் ஒரு தொழில்முறை ஹேக்கர். டாடாவின் டிசிஎஸ் ஐ.டி நிறுவனம் அளிக்கும் 'ஐலியோன்' என்ற மென்பொருளை அத்துமீறி பயன்படுத்தி அவர் மோசடி செய்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மோசடியில் இன்னும் பல வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்