கொள்ளையில் ஈடுபடுவதற்கு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 4 பேர் சிக்கினர்

சிவமொக்கா டவுன் பகுதியில் கொள்ளையில் ஈடுபடுவதற்கு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-01-14 18:45 GMT

சிவமொக்கா:

சிவமொக்கா டவுன் பகுதியில் கொள்ளையில் ஈடுபடுவதற்கு பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரவு நேரங்களில்

சிவமொக்கா டவுன் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்கள், கார்களை மறித்து கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் அதிகரித்து காணப்பட்டது. அதுகுறித்த புகார்களின் பேரில் போலீசார், கொள்ளை கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் டவுன் பகுதியில் என்.டி. சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் பதுங்கி இருப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த 4 பேர் கும்பலை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அவர்கள் துங்கா நகர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சித்தார்த் (வயது 21), சாதிக் உல்லா (21), வீரேஷ் (28) மற்றும் அபிநந்த் (26) ஆகிய 4 பேர் என்பதும், அந்த பகுதியில் பதுங்கி இருந்து, அந்த வழியாக தனியாக வருபவர்கள், பெண்களை குறிவைத்து பயங்கர ஆயுதங்களை காட்டி தாக்கி மிரட்டி நகை, பணம் பறிப்பில் ஈடுபட காத்திருந்ததும் தெரிந்தது. மேலும், அவர்கள் மீது சிவமொக்காவில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு கம்பி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் தொடர்புடைய மற்றொரு வாலிபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்