கத்தி முனையில் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர்

சிக்பள்ளாப்பூரில், இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி கத்தி முனையில் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-12-20 18:45 GMT

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூரில், இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி கத்தி முனையில் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வழிப்பறி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் நந்தி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களை வழிமறித்து தங்கநகை, பணம் ஆகியவற்றை பறிப்பதாக நந்தி போலீசாருக்கு புகார்கள் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நந்தி போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரோந்து பணி முடிந்ததும் வாடகை கார் ஒன்றில் சாதாரண உடையில் சந்தேகம் எழும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரிடம் சென்று வழிகேட்பது போல் நடித்தனர். அப்போது 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் பணத்தை பறிக்க முயன்றனர். பின்னர் போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கைதான 3 பேரும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி அதில் இருப்பவர்களிடம், நாங்கள் போலீசாருக்கு தகவல் கொடுப்பவர்கள், உங்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் யாராவது மிரட்டி பணம் பறித்தார்களா? என்று கேட்டு கவனத்தை திசை திருப்பி பின்னர் கத்தியை காட்டி மிரட்டி பணம், தங்கநகைகளை பறிப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பிடிபட்ட 3 பேரும் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா கார்ளா கிராமத்தை சேர்ந்த டிரைவர் கங்காதர்(வயது 31), பெங்களூரு எச்.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியை சேர்ந்த ஆன்லைன் உணவு வினியோக பிரதிநிதி ரதீஷ்குமார்(27), கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா ஹெப்பனி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண்குமார்(29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பறிமுதல்

அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள், செல்போன்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் பல்வேறு குற்றச்சம்பவங்களில் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் நெருங்கி பழகியதால் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் 3 பேரும் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட தொடங்கியது விசாரணையில் தெரியவந்தது.

அத்துடன் இவர்களில் மூளையாக செயல்பட்ட கங்காதர் மீது 19 வழக்குகளும், ரதீஷ்குமார் மீது 5 வழக்குகளும், அருண் குமார் மீது 9 வழக்குகளும் நிலுவையில் உள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள், 3 பேரும் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்