ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு - மத்திய அரசு தகவல்

கேரளாவைச் சேர்ந்த 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-27 07:38 GMT

திருவனந்தபுரம்,

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் பலர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ரஷிய ராணுவத்தில் சேர்ந்துள்ள இந்தியர்களை திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்தியா திரும்புவதற்கு தேவையான ஆவணங்களை இந்திய தூதரக அதிகாரிகள் தயார் செய்து வருவதாக அவர் கூறினார்.

அதே சமயம், மீதம் உள்ள 2 கேரள இளைஞர்களையும் திருப்பி அழைத்து வருவது தொடர்பாக ரஷிய அரசாங்கத்துடன் பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த இளைஞர்களை ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம், ரூ.2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கித் தருவதாக கூறி ரஷியாவிற்கு அழைத்துச் சென்றதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அந்த தனியார் நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்