காதலர் அறைக்கு படிக்க போன இடத்தில் தகராறு; காதலனை பல முறை குத்தி கொன்ற கல்லூரி மாணவி
மராட்டியத்தில் காதலர் தங்கிய அறைக்கு இரவில் படிக்க சென்றதில், தகராறு ஏற்பட்டு காதலனை கல்லூரி மாணவி பல முறை குத்தி கொலை செய்து உள்ளார்.
புனே,
மராட்டியத்தின் புனே நகரில் வகோலி பகுதியில் கல்லூரி ஒன்றில் டேட்டா அறிவியல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் யஷ்வந்த் முண்டே (வயது 22). இதற்காக கல்லூரி அருகே வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து அதில் தங்கியுள்ளார்.
இவருடன் அதே கல்லூரியில், இதே பிரிவை எடுத்து படித்து வருபவர் ஆகான்க்சா பன்ஹாலே (வயது 21). இருவரும் ஒன்றாக படிக்கும்போது, காதலித்து வந்து உள்ளனர். இந்நிலையில், தேர்வை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் அதற்கு தயாராகி வந்தனர்.
இதனால், காதலர் தங்கியிருந்த அறைக்கு ஆகான்க்சா நேற்றிரவு படிப்பதற்காக சென்று உள்ளார். இந்நிலையில், இன்று காலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில், யஷ்வந்துக்கு கத்தி குத்து ஏற்பட்டு, படுகாயம் அடைந்து உள்ளார். அவரை ஆகான்க்சா பல முறை சமையல் கத்தியால் குத்தி உள்ளார். இதன்பின் யஷ்வந்த், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார். எனினும், சிகிச்சை அளிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டார்.
இவர்கள் இருவருக்கு இடையே நடந்த தகராறில், ஆகான்க்சாவுக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.