பில்கிஸ் பானோ குற்றவாளிகள் விடுதலை: "உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" பிரதமரிடம் ராகுல் காந்தி கேள்வி

பில்கிஸ் பானோ 21 வயது கர்ப்பிணியாக இருந்தபோது, 11 குற்றவாளிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

Update: 2022-08-18 10:19 GMT

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பில்கிஸ் பானோ 21 வயது கர்ப்பிணியாக இருந்தபோது, 11 குற்றவாளிகளால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் இருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பில்கிஸ் பானோ வழக்கில் பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விடுதலை செய்ததற்காக ராகுல் காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் பாஜகவையும், பிரதமரையும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் 11 பேர் விடுதலை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"உத்தரபிரதேசத்தில் உள்ள உன்னாவ் வழக்கில் பாஜக எம்எல்ஏவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் மற்றும் அதே மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் வழக்கிலும், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டது.

மேலும், ஜம்மு காஷ்மீரில் கதுவா வழக்கில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்டது. அவற்றை தொடர்ந்து இப்போது குஜராத்திலும், பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற கிரிமினல்களுக்கு பா.ஜ.க ஆதரவு அளிப்பது, பெண்கள் மீதான அக்கட்சியின் மனநிலையை காட்டுகிறது. இதுபோன்ற அரசியலை செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா பிரதமர் ஜி?" என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்