உயிரிழந்த மனைவி: நடுவழியில் இறக்கி விட்ட ஆட்டோ ஓட்டுநர்: பணம் இல்லாததால் பல கி.மீ. தூரம் சுமந்து சென்ற கணவர் - தக்க சமயத்தில் உதவிய போலீஸ்...!

உடல்நலக் குறைவால் உயிரிழந்த மனைவியின் உடலை, கையில் இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் கணவர் தோளில் சுமந்துசென்ற நிலையில், உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவல் அளித்ததால் தக்க நேரத்தில் ஆந்திர மாநில போலீசார் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-02-09 17:04 GMT

ஐதராபாத்,

ஒடிசா மாநிலம் கொராபுட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சமுலு பங்கி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி இடே குரு (30) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கிவலசா என்றப் பகுதியில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அங்கு சிசிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்காமல் போய்விட்டதால் வீட்டிற்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மனைவியின் கிராமமான சுரடாவிற்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், ஆட்டோ ஒன்றில் ரூ. 2000 கொடுத்து அழைத்துச் சென்றுள்ளார் கணவர் சமுலு பங்கி. அப்போது எதிர்பாராவிதமாக ஆட்டோ பயணம் தொடங்கிய சிறிது தூரத்திலேயே இடே குரு உயிரிழந்து விட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுநர் இரக்கமின்றி, பயணத்தை தொடர முடியாது என்று கூறி - ஆந்திரா விழியாநகரம் ரிங் ரோட்டில் கணவன் சமூலையும் அவரது இறந்த மனைவியையும் மனிதாபிமானம் இல்லாமல் நடு வழியில் இறக்கிவிட்டு சென்று விட்டார்.

இதனால் செய்வதறியாது தவித்த சமுலு பங்கி, ஒருபக்கம் பணமும் இல்லாததால் அங்கிருந்தவர்களிடம் உதவிக் கேட்டுள்ளார். ஆனால் அங்கு தெலுங்கு மொழி பேசும் யாருக்கும், அவர் பேசும் ஒடியா மொழி புரியாததால் உதவி செய்ய முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, இறந்த தனது மனைவியை தோளில் போட்டுக்கொண்டு சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தனது மனைவி கிராமத்திற்கு சென்றுக் கொண்டிருந்தார். சில கிலோ மீட்டர்கள் அவர் நடந்துசென்ற நிலையில், இந்தக் காட்சியைக் கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் திருப்பதி ராவ் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் கிரண் குமார் நாயுடு உடனடியாக மனைவியின் உடலை சுமந்துச் சென்ற சமுலு பங்கி சென்ற இடத்திற்கு வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மொழி புரியாமல் தவித்த நிலையில், சமுலு பங்கியின் ஒடியா மொழியைப் பேசும் ஒருவரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். அவர், நடந்த விவரங்களை சமுலு பங்கியிடம் பேசி, போலீசாருக்கு விஷயத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, சமுலு பங்கியிடம் இருந்த மருத்துவமனை சான்றுகளை சரிப்பார்த்த போலீசார் இருவரும், ரூ. 10,000 ஏற்பாடு செய்து ஆம்புலன்ஸ் ஒன்றின் மூலம் கணவர் சமுலு பங்கி மற்றும் அவரது இறந்துப்போன மனைவியை கொண்டுசெல்ல வழிவகை செய்தனர்.

போலீசார் செய்த உதவியை அடுத்து சமுலு பங்கி அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். ஆந்திர காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்திலும் இதனைப் பகிர்ந்துள்ளது. 



Tags:    

மேலும் செய்திகள்