கெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை; கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்

உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும். தங்களால் திறக்க முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் கூறிவிட்டதாம்.;

Update: 2024-04-02 16:28 GMT

புதுடெல்லி,

டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவ்வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரியாக இருந்த மனீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. கெஜ்ரிவால் ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில், "மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஹவாலா பணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் கிடைக்கப் பெற்று அதை அவர்கள் கோவா சட்டமன்ற தேர்தல் பணிக்காக பயன்படுத்தினார்கள்.

இதற்கு ஆதாரங்கள் உள்ளன. கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்டுகளை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும்" எனச் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், அவருடைய கைப்பேசியை ஹாக்கிங் தெரிந்த சாஃப்ட்வேர் நிபுணர்கள் மூலம் அமலாக்கத் துறை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை அணுகி திறக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.இதற்காக அமலாக்கத் துறை ஆப்பிள் ஐபோனை நிறுவனத்தின் உதவியை நாடிய நிலையில், 'உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும். தங்களால் திறக்க முடியாது' என அந்நிறுவனத்தில் சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்