கணவரின் ஆசைக்காக 3-வது திருமணம் செய்து வைத்த 2 மனைவிகள்: ருசிகர சம்பவம்
மனைவிகள் தங்களது கணவருக்கு 3வது திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.;
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடப்பயலு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவர் முதலில் பர்வதம்மா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் முதல் மனைவியின் சம்மதத்துடன் அப்பலம்மா என்பவரை பாண்டண்ணா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பாண்டண்ணாவுக்கு 2-வது குழந்தை வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. தனது ஆசையை 2-வது மனைவியிடம் தெரிவித்தார்.
தற்போது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என இரண்டாவது மனைவி திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் பாண்டண்ணா 2-வது குழந்தை கட்டாயம் வேண்டும் என்று தொடர்ந்து அடம் பிடித்து வந்துள்ளார். கணவரின் ஆசையை நிறைவேற்ற மனைவிகள் இருவரும் தாங்களாகவே முன்வந்து அவருக்கு 3-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதே ஊரை சேர்ந்த லாவ்யா என்ற இளம் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்தனர். இதைத் தொடர்ந்து பத்திரிகை அடித்து உற்றார் உறவினர்கள் மற்றும் ஊர் முழுவதும் கொடுத்தனர். தங்களது படத்துடன் கணவர் மற்றும் 3-வது மனைவி படத்தை வைத்து வரவேற்பு டிஜிட்டல் பேனர்களையும் அவர்கள் வைத்தனர். உற்றார் உறவினர்கள் முன்னிலையில் கணவருக்கு 3-வது திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து வைத்து அசத்தினர்.
கணவரின் ஆசைக்காக 2 மனைவிகள் சேர்ந்து 3-வது திருமணம் செய்து வைத்த வாழ்த்து பேனர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.