ஆந்திராவில் கோர விபத்து.. புதுமணத் தம்பதி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்ற வாகனம் தெரியாததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.;
நந்தியாலா:
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த ரவீந்திரா, அவரது மனைவி லட்சுமி, மகன் பாலகிரண், மருமகள் காவ்யா மற்றும் மற்றொரு மகன் ஆகியோர் திருப்பதி சென்றுவிட்டு நேற்று இரவு ஊருக்கு திரும்பினர். இன்று அதிகாலையில் நந்தியாலா மாவட்டம் நல்லகரா கிராமத்தில் சென்றபோது அவர்களின் கார், முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் சிதைந்தது. காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்ற வாகனம் தெரியாததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் பலியான பாலகிரண்-காவ்யா இருவரும் புதுமண தம்பதியர் ஆவர். கடந்த மாதம் 29ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஓரிரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தின் ஷமீர்பேட்டையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் பலியானது அவர்களின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.