இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களை கண்டித்து ஜம்மு, உதம்பூர் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்

உதம்பூரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2022-09-29 11:47 GMT

ஜம்மு,

நேற்று இரவு, ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டொமைல் சவுக்கில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பேருந்தின் மேற்கூரை மற்றும் பின்பக்கம் பறந்து சென்றது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கரில் இருந்து வந்த இந்த பேருந்து, இரவு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. காலையில் பசந்த்கருக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு, உதம்பூரில், உள்ளூர்வாசிகள் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்களை நடத்தினர். மேலும், பாகிஸ்தானின் உருவ பொம்மையை எரித்து, பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பயங்கரவாதிகளின் வடிவமைப்புகளை முறியடிக்க நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி வரவுள்ள நிலையில் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக பாதுகாப்பு முகமைகளை போராட்டக்காரர்கள் கடுமையாக சாடினார்கள்.

ஜம்மு நகரில், சிவசேனா, பஜ்ரங் தள் மற்றும் டோக்ரா முன்னணியினர் பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி, குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களைக் கண்டுபிடித்து அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறினர். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, நகரில் கண்டன பேரணிகளை நடத்தினர்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.ஏ மிர், இரட்டை குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றும் மிகவும் வெட்கக்கேடானது என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்