சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு: மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கைது
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.;
பெங்களூரு: கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் கைதான ஹர்ஷா என்பவரிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் பெங்களூரு கலாசிபாளையா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சரீப் காலிமத் என்பவருக்கு தொடர்பு இருப்பதும், அவர் 10 பேருக்கு வேலை வாங்கி கொடுக்க இடைத்தரகராக செயல்பட்டதும் தெரியவந்தது. இதனால் சரீப் காலிமத்தை கைது செய்ய சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் தலைமறைவானார். இந்த நிலையில் மும்பையில் பதுங்கி இருந்த சரீப் காலிமத்தை நேற்று சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்த போலீசார் பெங்களூரு 1-வது ஏ.சி.எம்.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 10 நாட்கள் தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.