ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம்: ஊட்டியில் நாளை தொடங்குகிறது
ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம் ஊட்டியில் நாளை தொடங்குகிறது
புதுடெல்லி,
ஆர்.எஸ்.எஸ்.சில் மாநில பொறுப்பாளர்களாக இருக்கும் முழுநேர ஊழியர்களின் வருடாந்திர கூட்டம் நாளை (வியாழக்கிழமை) தமிழ்நாட்டில் ஊட்டியில் தொடங்குகிறது.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். தேசிய செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் கூறியதாவது:-
ஊட்டியில் 13-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை இக்கூட்டம் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, இணை பொதுச்செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகளின் மேலிட நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள். இந்த ஆண்டு நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. அடுத்த 5 மாதங்களுக்கான அமைப்புசார்ந்த நிகழ்ச்சிகள், திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.