காதலருடன் மனைவி சென்றதில் ஆத்திரம்; பாட்னா ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணவர்

பீகாரில் காதலருடன் மனைவி சென்ற ஆத்திரத்தில் கணவர் பாட்னா ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தெரிய வந்து உள்ளது.

Update: 2023-05-30 13:05 GMT

பாட்னா,

பீகாரில் உள்ள பாட்னா ரெயில் நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என நேற்றிரவு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதில், தொலைபேசி வழியே பேசிய நபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து விட்டு அழைப்பை வைத்து விட்டார்.

இதன் பின்னர், அனைத்து நடைமேடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ரெயில்வே போலீஸ் படை மற்றும் அரசு ரெயில்வே போலீசார் இணைந்து உடனடியாக நேற்றிரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கழிவறை, சுமைகளை வைக்கும் அறை, வாகன நிறுத்துமிடம், குளியலறை, காத்திருப்பு அறை என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது. பயணிகளின் உடைமைகள் மற்றும் வந்து சேர்ந்த ரெயில்களிலும் சோதனை நடைபெற்றது.

எனினும், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. அது வெறும் புரளி என தெரிய வந்தது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ராஜேஷ் குமார் ரஞ்சன் என விசாரணையில் தெரிய வந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜேஷின் மனைவி காதலருடன் தப்பி சென்று விட்டார். இதனால், தனித்து விடப்பட்ட ராஜேஷ் ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இதனை தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் அழைப்பை விடுத்து உள்ளார். அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்