செல்பி எடுப்பதாக லிவ் இன் காதலி, மகள்களை ஆற்றில் தள்ளிய காதலன் - குழாயில் தொங்கியவாறு உயிர்பிழைத்த சிறுமி

லிவ் இன் காதலி, அவரின் ஒரு வயது மகளும் ஆற்றில் விழுந்த நிலையில் மற்றொரு மகள் குழாயில் தொங்கியவாறு அவசர உதவி எண் '100'க்கு அழைத்துள்ளார்.

Update: 2023-08-07 10:46 GMT

அமராவதி,

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரவுலபாலம் போலீசாருக்கு அவசர உதவி எண் '100' மூலம் நேற்று அதிகாலை 3.50 மணியளவில் போன் வந்தது. அதில் பேசிய சிறுமி தான் கோதாவரி ஆற்றின் ரவுலபாலம் கவுதமி மேம்பாலத்தில் உள்ள குழாயை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதாகவும் தனக்கு உதவுமாறும் போலீசாரிடம் கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர். அங்கு கோதாவரி ஆற்றின் மேம்பால குழாயில் ஒரு சிறுமி தொங்கிக்கொண்டு உதவிக்காக குரல் கொடுத்து கொண்டு இருந்ததை கண்டனர்.

உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்ட போலீசார், நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து குழாயை பிடித்து தொங்கிக்கொண்டிருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் பெயர் கீர்த்தனா என்பது தெரியவந்தது. மேலும், சிறுமியின் தாயார், சகோதரி கோதாவரி ஆற்றில் தள்ளிவிடப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமியின் தாயாரின் லிவ் இன் காதலன் 3 பேரையும் ஆற்றில் தள்ளிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுமி கூறுகையில், என் அம்மா சுஹாசினியுடன் (வயது 36) வசிக்கும் நபர் உலவா சுரேஷ் (லில் இன் காதலன்). இவர் எங்களை ராஜமகேந்திரவரம் அழைத்து செல்வதாக கூறி என்னையும், எனது அம்மா சுஹாசினி எனது ஒரு வயது சகோதரி ஜெர்சியையும் காரில் அழைத்து வந்தார்.

ரவுலபாலம் பாலத்தில் செல்பி எடுப்பதாக கூறி காரை நிறுத்திய சுரேஷ் எங்கள் மூவரையும் கோதாவரி ஆற்றில் தள்ளிவிட்டார். நான் அங்கிருந்த குழாயை பிடித்து கொண்டு உதவி கோரி அவசர உதவி எண் 100 ஐ தொடர்பு கொண்டேன் என கூறினார்.

இதனை தொடர்ந்து லில் இன் காதலனால் கோதாவரி ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சுஹாசினி மற்றும் அவரது ஒரு வயது மகள் ஜெர்சியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், லில் இன் காதலி, குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்டு தப்பியோடிய காதலன் சுரேஷை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்