ஆந்திர பிரதேசம்: தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் அடிதடி, மோதல்
ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நரசராவ்பேட்டை தொகுதிக்கான எம்.எல்.ஏ. வேட்பாளர் சதலவாடா அரவிந்த பாபுவுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.;
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நரசராவ்பேட்டை தொகுதிக்கான எம்.எல்.ஏ. வேட்பாளர் சதலவாடா அரவிந்த பாபு மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நரசராவ்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் அந்த பகுதிக்கு வந்துள்ளனர்.
இதில், இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசியும், பாட்டில்களை வீசியும் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் தொண்டர்கள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தாக்குதலில், அரவிந்த பாபுவுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன. இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க. மற்றும் ஜனசேனா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து உள்ளது. இதற்காக, கடந்த திங்கட்கிழமை தொகுதி பங்கீடும் நடந்தது.
இதன்படி, நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான மொத்தமுள்ள 25 தொகுதிகளில், பா.ஜ.க. 6 இடங்களிலும், தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும் மற்றும் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.